ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி; "சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்"-பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி; சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்-பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பு எதிரொலியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம் என்று பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தேனி

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பு எதிரொலியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம் என்று பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஐகோர்ட்டு தீர்ப்பு

அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் 2 அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சார்பில் சென்னையில் அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்தார். மேலும் இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்றும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமனம் செய்தது செல்லாது என்றும் கூறியது.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தொடரலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

மேல் முறையீடு

ஐகோர்ட்டு தீர்ப்பு வெளியான நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்தனர். சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்து காரில் ஏறி புறப்பட தயாரானார்.

அப்போது அவரிடம், ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், "இன்று(நேற்று) ஐகோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்புக்கு, டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்" என்று கூறிவிட்டு காரில் சென்னை புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், வடசென்னை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். இதுதொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். 1½ கோடி தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். எந்த சூழ்நிலையிலும் எங்களுக்கு பின்னடைவு இல்லை. தொண்டர்களை நம்பி தான் இந்த இயக்கம் உள்ளது. பொதுக்குழுவை வைத்து இல்லை. இறுதி தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றார்.

பொதுச் செயலாளர் பதவி

ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு ஆதரவாளரான கோவை மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் நிருபர்களிடம் கூறும்போது, கோர்ட்டில் தீர்ப்புகள் மாறி, மாறி வருகிறது. தேர்தல் ஆணையம் வழங்கும் தீர்ப்பு தான் இறுதி தீர்ப்பு. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் தயவால் தான் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தார். ஆனால் தற்போது அவர் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறார்.

பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதா வகித்த பதவி. இந்த பதவிக்கு யாரையும் உட்கார வைக்க மாட்டோம் என்று இருந்த நிலையில், பொதுச் செயலாளர் பதவி வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அடம் பிடிக்கிறார். 5, 6 பேர் சேர்ந்து கம்பெனி போல் அ.தி.மு.க.வை நடத்த பார்க்கின்றனர். அது நடக்காது. ஓ.பன்னீர்செல்வம் உயிரோடு இருக்கும் வரை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இதனை யாராலும் மாற்ற முடியாது என்றார்.

பேட்டியின்போது, பெரியகுளம் நகர செயலாளர் அப்துல்சமது, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், கீழவடகரை ஊராட்சி துணை தலைவர் ராஜசேகர் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story