'தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை மக்கள் புறக்கணிப்பார்கள்'; வேலூர் இப்ராகிம் குற்றச்சாட்டு
‘தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை மக்கள் புறக்கணிப்பார்கள்’ என்று பா.ஜ.க.வின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் குற்றம்சாட்டினார்.
பா.ஜ.க.வின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் இன்று பழனியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை பா.ஜ.க. வரவேற்கிறது. எனவே விரைவில் இது நடைமுறைக்கு வரும். ஆனால் இந்த இடஒதுக்கீடு முறை தொடர்பாக தி.மு.க. போன்ற கட்சிகள் தவறான பிரசாரத்தை பரப்பி வருகின்றன. அதாவது பிராமணர்களுக்கு மட்டும் பா.ஜ.க. அரசு திட்டங்களை செய்து வருகிறது. சிறுபான்மையின மக்களை புறக்கணிப்பதாக கூறுவார்கள். ஆனால் மோடி தலைமையிலான அரசு சிறுபான்மை மக்களும் கல்வி, தொழில், பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே சிறுபான்மை மக்களை வாக்குவங்கியாக மட்டுமே பார்க்கும் தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை மக்கள் புறக்கணிப்பார்கள்.
இந்து மதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போகிறேன் என்று 'மனுஸ்மிருதி' புத்தகத்தை வழங்கி வருவது அரசியல் ஆதாயத்துக்காக திருமாவளவன் செய்யும் ஏமாற்று வேலை. அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் பதவி கிடைத்திருப்பது என்பது மக்களை இழிவுபடுத்தி விமர்சித்தால் தி.மு.க.வில் பொறுப்புகள் கிடைக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. குடும்ப அரசியல் செய்வதை பா.ஜ.க. ஏற்காது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அமையும். மக்கள் மீண்டும் மோடியை பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.