விலைவாசி உயர்வால் தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தி; முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு
விலைவாசி உயர்வால் தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம், அ.வெள்ளோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பி.கோபி தலைமை தாங்கினார். நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ., மாவட்ட துணைச்செயலாளர் விஜயபாலமுருகன், திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கட்சியின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் கலந்துகொண்டு மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் பேசுகையில், அரசியலில் ஒரு விபத்தை போன்று தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்த அவர்களால், அவற்றை நிறைவேற்ற முடியவில்லை. தமிழகத்தில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு என விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தி.மு.க. அரசு மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெறும் என்றார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், அமைப்பு செயலாளர் ஜக்கையன், ஒன்றிய செயலாளர்கள் யாகப்பன் (நிலக்கோட்டை), மயில்சாமி (ஆத்தூர் கிழக்கு), ஜெயலலிதா பேரவை ஆத்தூர் ஒன்றிய செயலாளர் சந்தானகிருஷ்ணன், மாவட்ட மீனவரணி இணை செயலாளர் அந்தோணிசாமி, வெள்ளோடு ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.