தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 17-ந் தேதி நடக்கிறது


தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி    17-ந் தேதி நடக்கிறது
x

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

கடலூர்


பிறந்த நாள்

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி 2022-ம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் அனைவருக்கும் வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் 3 பரிசுகளும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை தேர்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ.2 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பெறும்.

பேச்சுப்போட்டி

இதற்காக கல்லூரி முதல்வர்கள் அவர்தம் கல்லூரி மாணவர்களிடையே முதற்கட்டமாக பேச்சுப்போட்டிகள் நடத்தி ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் 2 பேரை தேர்வு செய்து அனுப்பவேண்டும். 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக சுற்றறிக்கை அனுப்பி முதற்கட்டமாக பள்ளிகளிலேயே பேச்சுப்போட்டிகள் நடத்தி, ஒரு கல்வி மாவட்டத்திற்கு 15 பேர் வீதம், நான்கு கல்வி மாவட்டத்திற்கு மொத்தம் 60 மாணவர்களை மட்டும் தேர்வு செய்து மாணவர்களை அனுப்பி வைத்தல் வேண்டும்.

போட்டிகளுக்குரிய தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பெற்றுள்ளது. இந்த போட்டிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வுக் கூட்ட அரங்கில் வருகிற 17-ந் தேதி நடைபெறும். அதனால் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் அன்று காலை 9.15 மணிக்கு தங்கள் வருகையை உறுதி செய்திட வேண்டும்.

மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story