மாவட்டந்தோறும் இலவச பயிற்சி வகுப்புகள்


மாவட்டந்தோறும் இலவச பயிற்சி வகுப்புகள்
x
திருப்பூர்


மத்திய அரசு பணிகளில் சேர மாவட்டந்தோறும் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

அமைச்சர் ஆய்வு

தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆவணங்களை சரிபார்த்த அவர், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் இலவச பயிற்சி வகுப்பை பார்வையிட்டார்.

பின்னர் அங்கு குருப்-1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி வகுப்பில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசியதாவது:-

படித்து வேலைவாய்ப்பு இல்லாமல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் போட்டித்தேர்வுகள் மூலமாக வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.

மாவட்டந்தோறும் பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய பணிகளில் 3 சதவீதம் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றுகிறார்கள். 97 சதவீதம் தமிழக இளைஞர்கள் அந்த பணிகள் குறித்து விழிப்புணர்வு இல்லாமல், தயாராகாமல் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். மத்திய அரசு பணிகளில் தமிழக இளைஞர்கள் சேரும் வகையில் விரைவில் முதல்கட்டமாக சென்னையில் முதல்-அமைச்சர் தொகுதியான கொளத்தூரிலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தொகுதியிலும் விரைவில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கவும், தொடர்ந்து மாவட்டந்தோறும் பயிற்சி வகுப்புகள் உருவாக்கப்பட உள்ளது.

வெற்றி உங்கள் வசமாகும்

மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் வேலை இல்லை என்ற நிலைமையை போக்க வேண்டும் என்பதற்காக முயன்று வருகிறோம். மற்றவர்கள் வேலைவாங்கிக்கொடுப்பார்கள் என்று யாரையும் நம்பாதீர்கள். உங்களால் முடியும் என்று உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். இளைஞர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது. நாங்கள் வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தால் நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் ஏன் வந்தோம், எதற்கு வந்தோம் என்பதை நமக்குள் கேள்வி கேட்க வேண்டும். குடும்ப சிரமத்தை நினைத்து படியுங்கள். முயற்சி, திறமை, நோக்கம், சிந்தனை, கடின உழைப்பு இருந்தால் வெற்றி கிடைக்கும். நீங்கள் முன்னேறினால் குடும்பம் முன்னேறும். அதனால் தமிழகம் முன்னேறும். நடக்கும் என்றால் நடக்கும், முடியும் என்றால் முடியும் என்ற நம்பிக்கையுடன் புறப்படுங்கள். வெற்றி உங்கள் வசமாகும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story