பண்ருட்டி பகுதி ஓட்டல்களில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்
பண்ருட்டி பகுதி ஓட்டல்களில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.
பண்ருட்டி நகர பகுதியில் உள்ள ஓட்டல்களில் மற்றும் பலகார கடைகளில் கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுப்பிரமணியன், நல்லதம்பி, சுந்தரமூர்த்தி ஆகியோர் பண்ருட்டியில் கும்பகோணம் சாலை, லிங்க் ரோடு, இந்திராகாந்தி சாலை, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள தெருவோரக்கடைகள், பலகார கடைகள் மற்றும் ஓட்டல்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செயற்கை வண்ணம் சேர்த்து தயாரிக்கப்பட்டதும், கெட்டுப்போனதுமான 5 கிலோ சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் சுகாதாரம் இன்றி இயங்கிய 3 ஓட்டல்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் இயங்கிய 5 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அப்போது உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல், கடை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டல் உரிமையாளர்களை, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் எச்சரித்தார். இந்த சம்பவத்தால் பண்ருட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.