1,717 கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் 1,717 கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் 1,717 கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
விளையாட்டு போட்டிகள்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டி வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. 5 பிரிவுகளில் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு போட்டிகள் நடக்கிறது.
இந்த போட்டியை கலெக்டர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கிரிக்கெட் போட்டி மட்டும் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரி மைதானத்திலும், மற்ற போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்திலும் நடத்தப்பட்டு வருகிறது.
1,717 பேர் பங்கேற்பு
அதன்படி, நேற்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கபடி, சிலம்பம், தடகளம் (100 மீ, 200 மீ., 400 மீ, 800 மீ, 1500 மீ, மற்றும் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல்) போட்டிகள் நடந்தது. தொடர்ந்து கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து, கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் 1,194 மாணவர்கள், 523 மாணவிகள் என மொத்தம் 1,717 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னின்று நடத்தினர்.