ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் காலையில் சுட்டெரித்த வெயில்; மாலையில் குளிர்வித்த மழை


ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் காலையில் சுட்டெரித்த வெயில்; மாலையில் குளிர்வித்த மழை
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் காலையில் வெயில் சுட்டெரித்தது. மேலும் மாலையில் மழை பெய்து குளிர்வித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடலூர்

ஸ்ரீமுஷ்ணம்,

கோடை வெயில் கடந்த 2 மாதங்களாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்றும், தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேற்று காலை வழக்கம்போல் கோடை வெயில் சுட்டெரித்தது. சாலையில் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர்.

ஆலங்கட்டி மழை

இந்நிலையில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மாலை 4 மணியளவில் சூரியன் மறைந்து, வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் கொட்டி தீர்த்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது.

இதேபோல் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை சுமார் ¼ நேரம் நீடித்தது. திடீரென பெய்த மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் தேங்கியது. மேலும் பலத்த காற்று வீசியதால், சிமெண்டு சீட்டுகள் பறந்தன. மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. இதுபற்றி அறிந்த மின்வாரிய துறை அதிகாரிகள் விரைந்து வந்து மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்ததால், காலையில் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மாலையில் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story