திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் 6-வது நாளாக உண்ணாவிரதம்


திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் 6-வது நாளாக உண்ணாவிரதம்
x

திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.

திருச்சி

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் விசா காலாவதியானது மற்றும் போலி முத்திரையுடன் இந்தியா வந்த இலங்கை, நைஜீரியா, கென்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலர் தண்டனை காலம் முடிந்தும் விடுவிக்கப்படாமல் உள்ளனர். இந்த நிலையில் முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் 10 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று 6-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை தமிழர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர்களாகிய நாங்கள் 6-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு சொட்டு உணவு கூட எடுத்துக் கொள்ளாமல் முழுமையாக பட்டினியாக இருந்து எங்களது குடும்பங்களோடு சேர்ந்து வாழ முடியாதா? என்ற எண்ணத்தோடு இந்த உண்ணாவிரத போராட்டத்தில் காத்திருக்கிறோம்.

எத்தனை முறை எங்கள் குழந்தைகளை அள்ளிக் கொஞ்ச முடியாது தவித்து இருப்போம். எங்கள் உறவுகள் உடல்நலம் முடியாமல் இறுதிக்கட்டங்களில் வைத்தியசாலைகளில் இருக்கும் பொழுது எத்தனை முறை ஒரு முறையாவது அவர்களை சந்தித்து விட்டு உதவ முடியாது என ஏங்கி இருப்போம்.

இலங்கையிலே தற்போதைய வறுமையின் காரணமாக தாங்கள் தாராள மனம் கொண்டு அத்தனை கோடி மதிப்புள்ள உணவு பொருட்களை அனுப்பி வைத்தீர்கள். நாங்கள் இங்கு உமக்கு அருகிலேயே பட்டினியாக எங்கள் வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களையும் ஒருமுறை கண்ணெடுத்துப் பார்த்து எங்கள் விடுதலைக்காக உதவி செய்யுங்கள். மிகவும் மனமிறங்கி கேட்டுக்கொள்கிறோம் எங்களை விடுதலை செய்து எங்கள் குடும்பங்களோடு வாழ விடுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story