ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி


ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி நடந்தது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதில் திரளான மக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆலய திருவிழா

ஸ்ரீவைகுண்டம் புனிதசந்தியாகப்பர் ஆலய திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது. அன்று காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், காலை 7 மணிக்கும் 2-வது திருப்பலியும், மதியம் 12மணிக்கு முன்றாவது திருப்பலியும் ஸ்ரீவைகுண்டம் குருசுகோயில் மக்கள் மற்றும் மீனவ மக்களுக்கான சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு புனித சந்தியாகப்பர் சொரூபம் வண்ண விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு குருசுகோயில் முன்பிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வேனில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

கொடியேற்றம்

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் சந்தியாகப்பர் கொடிகளை ஏந்தி பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஆலயத்தில் தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ஜான் பென்சன் கொடிகளை அர்ச்சித்தார். பங்குதந்தை ஜான்பென்சன் தலைமையில் மாலை 7.15 மணிக்கு ஆலயம் முன்புள்ள கொடி மரத்தில் வானவேடிக்கை முழங்க பக்தர்களின் கரகோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் பங்குதந்தை ஸ்டார்வின் தலைமையில் மறையுரையும், நற்கருனை ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30மணிக்கும், 6.30 மணிக்கும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன.

தேர்பவனி

9-வது திருவிழாவான நேற்று முன்தினம் ஆலயத்தில் காலை, மாலையில் சிறப்புத்திருப்பலியும், இரவு நற்கருணை பவனி மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. இதில், பங்கு இறைமக்கள் மற்றும் கடலோர கிராமங்களை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர். நேற்று அதிகாலை 4.45 மணி, காலை 5.45 மணி மற்றும் காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஸ்டீபன்அந்தோணி ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் ஆலயத்தில் இருந்து மிக்கேல் தூதர் முன்செல்ல சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும், ஆலயத் திருத்தேரில் மாதாவும் காட்சியளித்தனர். திருத்தேரை மீனவ மக்கள், இறைமக்கள் திரளாக கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து ஆலயம் சென்றடைந்தது. இதில் குழந்தை ஏசுவை மாதா சுமந்தவாறு புனித சந்தியாகப்பர் தேர்பவனியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, பெரியதாழை, இடிந்தகரை, தூத்துக்குடி, அமலிபுரம் உள்ளிட்ட கடலோர மீனவ மக்கள் குடும்பத்தினருடந் திரண்டிருந்து உப்பு, மிளகு, மலர் தூவி வழிபாடு நடத்தினர். ஏராளமான கிறிஸ்தவர்கள் குழந்தைகளுக்கு முடிகாணிக்கை செலுத்தியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் வேண்டுதலை நிறைவேற்றினர்.

கொடியிறக்கம்

இந்த வழிபாட்டில் மதத்திற்கு பல்வேறு மதங்களை ேசர்ந்தவர்களும் பங்கேற்று வழிபாடுநடத்தினர். மாலை 6 மணிக்கு சிறப்புஆராதனை நடைபெற்றது. இன்று(புதன்கிழமை) காலையில் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குருசுகோவில் ஆலய பங்குதந்தை ஜான் பென்சன் மற்றும் அருட்சகோதரிகள், பங்குபேரவையினர், ஊர்நலக்கமிட்டியினர், பங்குஇறைமக்கள் செய்திருந்தனர். திருவிழாவில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆலோசனையின் பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு மாயவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story