ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் 80 இடங்களில் அதிநவீன கேமரா பொருத்தம்


ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் 80 இடங்களில் அதிநவீன கேமரா பொருத்தம்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக 80 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரி கூறினார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக 80 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரி கூறினார்.

மேகமலை புலிகள் காப்பகம்

இந்தியாவின் 51-வது புலிகள் காப்பகமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, மேகமலை பகுதியை இணைத்து சுமார் 1 லட்சம் எக்டர் பரப்பளவிலான வனப்பகுதியை கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வனத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, செந்நாய், மான், ராஜ நாகம், மலை பாம்பு உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு 3 விதமாக நடத்தப்படுவது வழக்கம். அதில் அனைத்து வகை வனவிலங்குகளுக்கு ஒரு முறை, யானை மற்றும் புலிகளுக்கு தனியாக என கணக்கெடுப்பு பணி நடைபெறும்.

இந்த கணக்கெடுப்பின் போது நேரில் பார்த்தவை, விலங்குளின் ஒலி, எச்சம், கால்தடம், கேமரா பதிவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதற்காக சத்தியமங்கலம் வனப்பகுதியில் கணக்கெடுப்புக்காக பயன்படுத்தபடும் அதிநவீன கேமரா ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டுவரப்பட்டு கணக்கெடுப்புக்காக பயன்படுத்தப்பட்டது. அதில் சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் பதிவாகி இருந்தன.

80 இடங்களில் கேமரா

தற்போது 2-ம் கட்டமாக புலிகள் எண்ணிக்கையை அறிந்து கொள்ளும் வகையில் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. முதல் கட்ட கணக்கெடுப்பில் சுமார் 300 கேமராக்கள் பொருத்தப்பட்டு பணிகள் நடைபெற்றன.

தற்போது 2-ம் கட்ட கணக்கெடுப்பில் புலிகள் நடமாடும் குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் நான்கு சரகங்களில் அதாவது ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், மற்றும் சாப்டூர் ரேஞ்ச் பகுதியில் தலா 20 எண்ணிக்கையில் மொத்தம் 80 அதி நவீன கேமரா பொருத்தப்பட்டு புலிகள் கணெக்கெடுப்பு பணி நடக்க உள்ளது.

பொருத்தப்படும்

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 6 புலிகள் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் துல்லிய கணக்கெடுப்புக்காக இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. புலிகள் இனப்பெருக்க காலமான நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் நடமாடும். புலிகள் வனப்பகுதியில் குறிப்பிட்ட எல்லையை வரையறுத்து வாழும்.

தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் புலிகள் எல்லையை குறிப்பதற்கு அதிக அளவு வெளியில் நடமாடும். அந்த வகையில் புலிகள் அதிக அளவு நடமாடும் 80 இடங்களை கண்டறிந்து அதிநவீன கேமராக்கள் பொருத்த உள்ளோம். சில இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமராக்கள் குறிப்பிட்ட நாட்கள் வரை வனப்பகுதியில் இருக்கும் என்றார்.


Next Story