எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 32 ஆயிரத்து 436 பேர் எழுதினர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 32 ஆயிரத்து 436 மாணவ, மாணவிகள் எழுதினர். 885 பேர் தேர்வு எழுத வரவில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 32 ஆயிரத்து 436 மாணவ, மாணவிகள் எழுதினர். 885 பேர் தேர்வு எழுத வரவில்லை.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு
தமிழ்நாட்டில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தேர்விற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
செய்யாறு கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 699 பேரும், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 19 ஆயிரத்து 622 பேரும் என திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 321 மாணவ, மாணவிகள் இத்தேர்விற்காக விண்ணப்பித்து இருந்தனர்.
இதில் இன்று நடந்த தேர்வை 32 ஆயிரத்து 436 பேர் எழுதினர். 885 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு மையங்களில் 154 முதன்மை கண்காணிப்பாளர்கள், 154 துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர், அறைக் கண்காணிப்பாளர்கள், சொல்வதை எழுதுபவர்கள், வழித்தட அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள், மதிப்பெண் சாரிபார்க்கும் அலுவலர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கலெக்டர் ஆய்வு
அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லாத மின்சார வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் பஸ் வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் தேர்வு மையங்களில் பள்ளிக் கல்வித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தரைத்தளத்திலேயே தேர்வெழுத போதிய அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை கலெக்டர் முருகேஷ் தெள்ளார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத சென்ற மாணவிகளுக்காக சிறப்பு வழிபாடு செய்து ஆசிரியைகள் மாணவிகளுக்கு திலகமிட்டு தேர்விற்கு அனுப்பி வைத்தனர்.