எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.39 சதவீதம் தேர்ச்சி; 3,718 பள்ளிகள் 100 சதவீதம் வெற்றி
9 லட்சத்து 14 ஆயிரத்து 320 பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் 3 ஆயிரத்து 718 பள்ளிகள் 100 சதவீதம் வெற்றியை பெற்று இருக்கிறது.
சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 502 மேல்நிலைப்பள்ளிகள், 5 ஆயிரத்து 136 உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 59 ஆயிரத்து 303 மாணவர்களும், 4 லட்சத்து 55 ஆயிரத்து 17 மாணவிகளும் என மொத்தம் 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 பேர் எழுதி இருந்தனர்.
இவர்களுக்கான தேர்வு முடிவு நேற்று காலை வெளியானது. தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாகவும், அவர்கள் தேர்வு எழுதுவதற்காக சமர்ப்பித்திருந்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண் வாயிலாகவும் மதிப்பெண்களை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிலும் மாணவ-மாணவிகள் நேற்று ஆர்வமுடன் தங்கள் மதிப்பெண்களை பார்த்தனர்.
91.39 சதவீதம் தேர்ச்சி
தேர்வு முடிவை பொறுத்தவரையில், 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 பேர் எழுதி இருந்ததில், 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 மாணவர்களும், 4 லட்சத்து 30 ஆயிரத்து 710 மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 பேர் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 91.39 சதவீதம் ஆகும். இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் 6.50 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
மொத்த தேர்ச்சி சதவீதத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேர் எழுதியதில், 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதன் தேர்ச்சி சதவீதம் 90.07 சதவீதம் ஆகும். அந்தவகையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது.
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
12 ஆயிரத்து 638 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி இருந்ததில், 3 ஆயிரத்து 718 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று இருக்கிறது. இதில் அரசு பள்ளிகளை பொறுத்தமட்டில் 1,026 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை அடைந்து இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தில், அரசு பள்ளிகள் 87.45 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24 சதவீதமும், தனியார் சுயநிதி பள்ளிகள் 97.38 சதவீதமும், இருபாலர் பள்ளிகள் 91.58 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.38 சதவீதமும், ஆண்கள் பள்ளிகள் 83.25 சதவீதமும் தேர்ச்சியை பெற்று இருக்கின்றன.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் 10 ஆயிரத்து 808 பேர் எழுதி இருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 703 பேர் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். அதேபோல், சிறைவாசிகளாக 264 பேர் தேர்வு எழுதியதில், 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி தேர்ச்சி சதவீதம்
தேர்ச்சி பெற்றவர்களில் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 512 மாணவர்கள், 6 ஆயிரத்து 346 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 858 பேர் எழுதி, அவர்களில் 5 ஆயிரத்து 786 மாணவர்கள், 5 ஆயிரத்து 921 மாணவிகள் என மொத்தம் 11 ஆயிரத்து 707 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
தேர்ச்சி சதவீதம் 91.05 ஆகும். அதேபோல், காரைக்காலில் இருந்து 2 ஆயிரத்து 557 பேர் எழுதியதில், 914 மாணவர்கள், 1,117 மாணவிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 31 பேர் (79.43 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர்.
மதிப்பெண் சான்றிதழ்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். ஆனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் யாரும் எடுக்காததால், 500-க்கு 500 மதிப்பெண் மாணவ-மாணவிகள் எடுத்திருக்க வாய்ப்பு இல்லை என்றே கல்வித்துறை வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளன. இதனை வைத்து பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கு அவர்கள் தயாராக வேண்டும். விரைவில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில், பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் நடைபெற உள்ளது.
தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் அடுத்தகட்டமாக துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியும். துணை தேர்வுக்கு வருகிற 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தேர்வு எப்போது நடைபெறும் என்ற தகவல் விரைவில் வெளியாகும்.