எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 92.31 சதவீதம் பேர் தேர்ச்சி


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 92.31 சதவீதம் பேர் தேர்ச்சி
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 92.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை

92.31 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 41 மாணவர்களும், 12 ஆயிரத்து 223 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 264 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதினர். இதில் 10 ஆயிரத்து 768 மாணவர்களும், 11 ஆயிரத்து 630 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 398 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

மொத்த தேர்ச்சி விகிதம் 92.31 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 87.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனை இந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தேர்ச்சி விகிதம் 4.46 சதவீதம் அதிகரித்துள்ளது.

செல்போனில் பார்த்தனர்

தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதும் மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்கள் விவரம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் பலர் தங்களது செல்போன்களிலே தேர்வு முடிவுகளை ஆர்வமுடன் பார்த்து அறிந்து கொண்டனர். ஒரு சிலர் தங்களது பள்ளிக்கு வந்து தாங்கள் பெற்ற மதிப்பெண்களை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவித்து வாழ்த்து பெற்றனர்.

தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவ-மாணவிகள் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் அந்தந்த பள்ளியில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்ததாக மேல்நிலை கல்வியில் பிளஸ்-1 வகுப்பிற்கான பாடப்பிரிவை தேர்வு செய்யும் முடிவில் இறங்கினர்.

மாநில அளவில் 16-வது இடம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 92.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி விகித அடிப்படையில் மாநில அளவில் 16-வது இடத்தை புதுக்கோட்டை பிடித்தது. கடந்த ஆண்டில் மாநில அளவில் 30-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்த நிலையில் மாநில அளவிலான பட்டியலிலும் முன்னேற்றமடைந்தது.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளில் பாடவாரியாக தேர்ச்சி விகிதம் வருமாறு:- தமிழ் பாடம்- 96.13 சதவீதம், ஆங்கிலம்- 98.63 சதவீதம், கணிதம்- 95.30 சதவீதம், அறிவியல்- 95.61 சதவீதம், சமூக அறிவியல்-97 சதவீதம்.

86 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 331 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர். இதில் 26 அரசு பள்ளிகள் உள்பட 86 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story