எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை கர்ப்பமாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் கைது


எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை கர்ப்பமாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் கைது
x

எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை கர்ப்பமாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

மாணவி கர்ப்பம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறியதையடுத்து, அவரது பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அந்த மாணவி 8 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இது பற்றி மாணவியிடம் விசாரித்தபோது, பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன், அந்த மாணவியுடன் பழகியதும், வீட்டில் இருந்த மாணவியிடம் அப்பா, அம்மா விளையாட்டு விளையாடலாம் என்று கூறி கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் உறவு கொண்டதும், அதனை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

மாணவன் கைது

இந்நிலையில் மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை மேற்கொண்டார்.

மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவனை கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இதையடுத்து நீதிபதி உத்தரவின்பேரில் அந்த மாணவன் திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story