எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் விடைபெற்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி கடந்த 3-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதேபோல் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கி கடந்த 5-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந் தேதி தமிழ் தேர்வுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து 10-ந் தேதி ஆங்கிலம், 13-ந் தேதி கணிதம், 17-ந் தேதி அறிவியல் இறுதியாக 20-ந் தேதி சமூக அறிவியலுடன் நேற்று முடிவடைந்தது.
அடுத்து பிளஸ்-1 வகுப்பில் என்ன பாடப்பிரிவில் சேரவேண்டும் என்பது பாடப்பிரிவில் எடுக்கும் மதிப்பெண்களை பொறுத்தே அமையும்.
மாணவ-மாணவிகள் உற்சாகம்
இந்த நிலையில் நேற்றுடன் பொதுத்தேர்வு நிறைவடைந்த நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர். தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்ததும் அவர்கள் தங்களது மகிழ்ச்சியை துள்ளிக்குதித்து வெளிப்படுத்தினர். மேலும் ஒருவருக்கொருவர் செல்பி எடுத்துக்கொண்டனர். ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
அன்னவாசல்
அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, பரம்பூர், வயலோகம், மண்ணவேளாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் கடைசி நாளான நேற்று சமூகஅறிவியல் தேர்வு நடைபெற்றது. நேற்று தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் வகுப்பறையை விட்டு உற்சாகத்துடன் வெளியேறினர். பின்னர் மாணவர்கள் வினாத்தாள்களை மகிழ்ச்சியில் பறக்க விட்டு பிடித்தனர். சில மாணவர்கள் சட்டைகளில் பேனா மையை அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சில மாணவ-மாணவிகள் கண்கலங்கிய படி ஒருவருக்கொருவர் பிரியாவிடை கொடுத்து சென்றதை காணமுடிந்தது.