எஸ்.எஸ்.எல்.சி. மாணவி 2-வது முறையாக கடத்தல்
பண்ருட்டி அருகே எஸ்.எஸ்.எல்.சி. மாணவி 2-வது முறையாக கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுப்பேட்டை:
பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடியை சேர்ந்தவர் முருகன் மகன் மணிகண்டன் (வயது 30). இவர் கடந்த 17.10.2022 அன்று, புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் 16 வயதுடைய மாணவியை கடத்திச் சென்றிருந்தார்.
இது குறித்து அந்த மாணவியின் தந்தை பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அந்த மாணவி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், கடந்த 31-ந் தேதி இரவு 11 மணி அளவில் மாணவியை மீண்டும் கடத்திச் சென்றார். இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர், புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனையும், மாணவியையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.