எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

பட்டுக்கோட்டையில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அய்யனார் கோவில் எதிரே உள்ள சாலைத்தெருவை சேர்ந்தவர் சூரியபாண்டி. டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் யோகேஸ்வரி(வயது 15). இவர், பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை யோகேஸ்வரி பள்ளியில் சமூக அறிவியல் தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பினார். அப்போது மாணவி கவலையுடன் வீட்டில் அமர்திருந்துள்ளார். இதுகுறித்து யோகேஸ்வரியின் தாய் செல்லம்மாள் கேட்டதற்கு தேர்வை சரியாக எழுதவில்லை என்று கூறி அழுதாராம். அப்போது மகளை சமாதானப்படுத்தி விட்டு செல்லம்மாள் பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த யோகேஸ்வரி இரவு 8 மணியளவில் வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். அந்தநேரத்தில் வீடு திரும்பிய செல்லம்மாள், மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து கூச்சல் போட்டார்.அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து யோகேஸ்வரியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி யோகேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.மேலும் இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story