புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா
குத்தாலம் அருகே புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா
குத்தாலம்:
குத்தாலம் அருகே திருவாலங்காடு ஊராட்சி டி.பண்டாரவாடை கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வீதி உலா நேற்று முன்தினம் நடந்தது. அப்போது பேண்ட் வாத்தியம் இசை நிகழ்ச்சியுடன் வாணவேடிக்கைகள் முழங்க மலர் மற்றும் மின் அலங்காரத்துடன் தேர் பவனி நடந்தது. ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர் பவனி டி.பண்டாரவாடை, மாதாக்கோவில், திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் திரளான இறை மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். முன்னதாக மாலை குத்தாலம் பங்குத்தந்தை ஜெர்லின் கார்ட்டர் தலைமையில் திருப்பலி நடந்தது. பின்னர் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவாலங்காடு, டி.பண்டாரவாடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டு ஆசி பெற்றனர். விழா ஏற்பாடுகளை டி.பண்டாரவாடை, மாதாக்கோவில், திருவாலங்காடு நாட்டாண்மைகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.