குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்
குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் பஞ்சாயத்தில் ஏ.மீனாட்சிபுரம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த பகுதியில் போதிய சாலை வசதியும், வாருகால் வசதியும் இல்லாத நிலையில் இப்பகுதி மக்கள் தங்களுக்கு சாலை மற்றும் வாருகால் வசதிகள் வேண்டும் என்று பஞ்சாயத்து நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்ற பஞ்சாயத்து தலைவர் முத்துராஜ், செயலர் முத்துப்பாண்டி ஆகியோர் ஏ.மீனாட்சிபுரம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள மக்கள் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி குடியிருப்புகளுக்குள் வரும் நிலை தொடர்கிறது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் தண்ணீரில் நனைந்து வீணாகி வருகிறது. இதை தடுக்க இந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் முத்துராஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, அந்த பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு இருப்பது குறித்து யூனியன் சேர்மன் முத்துலட்சுமி விவேகன்ராஜியிடம் தெரிவித்து விட்டேன். தரைப்பாலத்தை அகற்றி விட்டு புதிய வாருகால் அமைத்து, பாலம் அமைத்து தர வேண்டும் என்று கேட்டுள்ளேன். விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து மாணிக்கம்தாகூர் எம்.பி.யிடமும் தெரிவித்துள்ளேன். விரைவில் வாருகால் அமைக்க உதவுவதாக அவர் உறுதி அளித்துள்ளார் என்றார்.