ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்
கூத்தாநல்லூர் அருகே பொதக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே பொதக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையம்
கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் உள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இந்த சுகாதார நிலையம் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ளது.
இங்கு பொதக்குடி, அதங்குடி, சேகரை, ஆய்குடி, லெட்சுமாங்குடி, பூதமங்கலம், விழல்கோட்டகம், வெள்ளக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றன. மேலும், பெண்களுக்கு பிரசவம் தொடர்பான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
தேங்கி நிற்கும் மழைநீர்
இந்த ஆரம்ப சுகாதார நிலையம் நுழைவு வாயில் அருகில் சாலையில் பள்ளமான இடங்களில் மழை நீர் அடிக்கடி தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழைநீரில் வாகனங்கள் சென்று வருவதால், அந்த பகுதி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால், சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்று வருபவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.
அகற்ற வேண்டும்
சிலர் தேங்கி நிற்கும் மழை நீரில் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். மழை நீர் ஒரு சில நாட்கள் தொடர்ந்து தேங்கி நிற்கும் போது கொசு உற்பத்தியாகி வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் மழை நீர் தேங்கி நிற்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.