ரெயில்வே சுரங்கப்பாதைகளில் தேங்கும் தண்ணீர்


ரெயில்வே சுரங்கப்பாதைகளில் தேங்கும் தண்ணீர்
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மழைக்காலங்களில் ரெயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகங்கை

காரைக்குடி,

மழைக்காலங்களில் ரெயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரெயில்வே சுரங்கப்பாதை

இந்திய ரெயில்வே துறை சார்பில் நாடு முழுவதும் தற்போது ரெயில்வே பாதையை மின் மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரெயில்வே பாதைகளை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது மின் மயமாக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காரைக்குடி ரெயில் நிலையத்தில் ஒரு சுரங்கப்பாதையும், அழகப்பா பொறியியல் கல்லூரி பின்பகுதியில் உள்ள ரெயில்வே வழித்தடத்தில் ஒரு சுரங்கப்பாதையும், கல்லல் அருகே குருந்தம்பட்டு பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதையும், சிவகங்கை-தொண்டி சாலையில் செல்லும் ரெயில்வே பாதையில் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் காரைக்குடி ரெயில்நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை வழியாக அருகே உள்ள பொன்நகர், லெட்சுமிநகர், கலைமணி நகர், பத்மாவதி நகர், ரெயில்வே குடியிருப்பு பகுதிகள், தெற்கு மற்றும் வடக்கு குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பாதை வழியாக மோட்டார் சைக்கிள், கார் ஆகிய வாகனங்களில் சென்று வருகின்றனர்.

தேங்கி நிற்கும் தண்ணீர்

கல்லல் அருகே குருந்தம்பட்டு பகுதியல் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாக அருகே உள்ள வாரிவயல், கூத்தலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் சென்று வருகின்றனர். காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி பின்புறம் வழியாக கண்டனூர், புதுவயல் செல்லும் பாதையில் மற்றொரு சுரங்கப்பாதையும் உள்ளது. மழைக்காலங்களில் இந்த சுரங்கப்பாதைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதையடுத்து அந்த சுரங்கப்பாதையில் உள்ள தண்ணீர் ஜெனரேட்டர் மூலம் வெளியற்றப்படுகிறது.

ஆனால் தண்ணீரை வெளியேற்றுவதற்கு சுமார் 3 மணி நேரம் வரை ஆவதால் அப்பகுதி மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தால் இரவு முழுவதும் இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கும். மறுநாள் காலையில்தான் ரெயில்வே ஊழியர்கள் வந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நிரந்தர தீர்வு

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தரப்பில் கூறியதாவது, ராமசாமி (சமூக ஆர்வலர்):- மழைக்காலங்களில் தொடர்ந்து இவ்வாறு சுரங்கப்பாதையில் தண்ணீர் நிரம்பி ஆள் உயரத்திற்கு தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் வாகனங்கள் சென்று வர முடியவில்லை. இதேபோல் ரெயில்வே நிர்வாகம் சார்பில் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்ற அதிக நேரம் ஆவதால் அப்பகுதி வழியாக வாகனங்கள் சென்று வரமுடியாத நிலை உள்ளது. ஒவ்வொரு முறையும் இதேபோல் தண்ணீர் வெளியேற்றப்படுவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

பெத்ராஜ் காரைக்குடி:- மழைக்காலங்களில் காரைக்குடி பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம்போல் தேங்கி இதே பிரச்சினை நீடித்து வருகிறது. இதனால் அந்த வழியாக பள்ளி செல்ல உள்ள மாணவர்கள், அரசு வேலைக்கு செல்லும் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு ரெயில்வே துறை சார்பில் நிரந்த தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story