மலையடி குளத்தில் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும்
திருமயம் கோட்டை அருகே மலையடி குளத்தில் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலையடி குளம்
திருமயம் கோட்டை அருகே மலையடி குளம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. திருமயத்தில் உள்ள அனைத்து குளத்திலும் நீர் வற்றினாலும் கூட இந்த மலையடி குளத்தில் தண்ணீர் வற்றாமல் இருந்து கொண்டே இருக்கும். இந்த குளத்தில் படிகள், மணல் திட்டுகள் எதுவும் கிடையாது. மிகவும் ஆழமான இந்த குளத்தின் எந்த பக்கம் பார்த்தாலும் மேடு பள்ளங்கள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்த குளத்தில் தான் திருமயம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் குளித்தும், துணிகளை துவைத்தும் வருகின்றனர்.
ஆர்வத்துடன் குளிக்க...
இவர்கள் எந்த பகுதியில் குளித்தால் பாதுகாப்பாக இருக்கும் என தெரிந்து வைத்துக் கொண்டு அந்த பகுதியில் குளித்து வருகின்றனர். ஆனால் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்களுக்கு இந்த குளத்தில் என்ன ஆழம் என்பது தெரியாது. தண்ணீரை பார்த்தவுடன் இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆபத்தை அறியாமல் ஆர்வத்துடன் குளத்தில் குளிக்க இறங்கி விடுகின்றனர்.
மேலும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களும், பழனிக்கு செல்லும் பக்தர்களும் இந்த வழியாக செல்லும்போது குளத்தில் குளித்து விட்டு அப்பகுதியில் உள்ள பெருமாள், சிவன், பைரவர் சுவாமிகளை தரிசித்து செல்கின்றனர்.
கோரிக்கை
இந்த குளத்தில் படிகள் எதுவும் இல்லாததால் குளத்தில் குளித்த அய்யப்ப பக்தர்கள் உள்பட சிலர் சில வருடங்களுக்கு முன்பாக வழுக்கி விழுந்து கரைக்கு ஏற முடியாமல் நீரில் மூழ்கி இறந்து உள்ளனர். சில நேரங்களில் உள்ளூர் வாசிகளும் வழுக்கி விழுந்து விடுகின்றனர். எனவே இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க பக்தர்களும், பொதுமக்களும் பாதுகாப்பாக குளித்து செல்ல படிக்கட்டுகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குளம்
திருமயம் கோட்டை பகுதியை சேர்ந்த தேவி:- இந்த பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்கு மலையடி குளம் முக்கியமாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த குளத்தை தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். குளத்தில் படிக்கட்டுகள் எதுவும் இல்லாமல் உள்ளதால் மிகவும் சிரமப்பட்டு குளித்து வருகின்றனர். மேலும் பாறையின் சரிவில் நின்று ஆபத்தான நிலையில் குளித்து வருகின்றனர். எனவே மக்கள் பிரதிநிதிகள் இந்த குளத்திற்கு படிக்கட்டுகள் அமைத்து கொடுத்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
படிக்கட்டுகள் அமைக்க வேண்டும்
திருமயம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து:- இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் வெயில் காலங்களில் இந்த மலையடி குளத்தை பார்த்துவிட்டு அதிகமானோர் குளித்துவிட்டு தான் செல்கின்றனர். மேலும் இந்த பகுதி வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிகாலையில் இறங்கி குளித்துவிட்டு தான் செல்கின்றனர். அவர்களின் பாதயாத்திரை பயணம் பாதுகாப்பாக அமைய வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை பார்வையிட்டு படிக்கட்டுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
வசதியாக இருக்கும்
திருமயம் கோட்டை பகுதியை சேர்ந்த சிவ சண்முகம்:- குளத்தில் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள், விவசாயிகள் ஏராளமானோர் பகல் மற்றும் இரவு வேளையிலும், அதிகாலையிலும் குளித்து வருகின்றனர். இந்த குளத்தை விட்டால் வேறு குளங்கள் எதுவும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடையாது. எனவே பொதுமக்கள் நலன் கருதி ஆண்கள், பெண்கள் குளிக்கும் பகுதி என இரு பகுதிகளிலும் படிக்கட்டு அமைத்துக் கொடுத்தால் பாதுகாப்பாக பயன்படுத்தி கொள்வதற்கு வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.