கூடலூரில் முடங்கி போன பூங்கா திட்டம்
தொடர் நடவடிக்கை எடுக்காததால் கூடலூரில் நிறைவேறாமல் முடங்கி போன பூங்கா திட்ட பணிக்காக செலவழித்த அரசு பணம் ரூ.28 லட்சம் வீணாகி போனது.
கூடலூர்,
தொடர் நடவடிக்கை எடுக்காததால் கூடலூரில் நிறைவேறாமல் முடங்கி போன பூங்கா திட்ட பணிக்காக செலவழித்த அரசு பணம் ரூ.28 லட்சம் வீணாகி போனது.
ரூ.28 லட்சம் நிதி
தமிழகம்-கர்நாடகா, கேரள மாநிலங்களை இணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் உள்ளது. இங்கு பொழுதுபோக்கிற்காக சுற்றுலா திட்டங்கள் எதுவும் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டும் இன்றி பொதுமக்களும் கூடலூரில் பூங்கா அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு கூடலூர் நகராட்சி நிர்வாகம் ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கியது.
தொடர்ந்து கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் நீதிமன்றம் அருகே பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக குடிநீர் தொட்டி, நடைபாதைகள், கழிப்பறைகள் கட்டப்பட்டது. மேலும் பூங்காவுக்கு வரும் சிறுவர்கள் விளையாடும் வகையில் உபகரணங்கள் வாங்கப்பட்டது. ஆனால், இதுவரை பொருத்தப்படவில்லை.
அரசு பணம் வீண்
இந்த நிலையில் பூங்கா நிலத்தை உரிமை கோருவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து வழக்கும் நிலுவையில் இருப்பதால் பணி முழுமை பெறாமல் பாதியில் முடங்கியது. இந்த நிலையில் பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்ட குடிநீர் தொட்டிகள், நடைபாதைகள், கழிப்பறைகள் அனைத்தும் உடைந்து பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது.
மேலும் புதர் மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக அரசு பணம் வீணாகி வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ரூ.28 லட்சம் வரை அரசு பணம் செலவழித்தும் பூங்கா அமைக்கும் திட்டம் முழுமை பெறாமல் போய் விட்டது. இதனால் அரசு பணம் வீணாகி உள்ளது. நீதிமன்ற வழக்கு தொடர்பாக அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.