அரசு பள்ளியில் மாநில கல்விக்கொள்கை கருத்து கேட்பு கூட்டம்
பரமக்குடி அருகே அரசு பள்ளியில் மாநில கல்விக்கொள்கை கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாநில கல்விக்கொள்கை குறித்து மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதற்கு மாநில கல்விக் கொள்கை தலைவரும் முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதியுமான முருகேசன் கலந்து கொண்டு அவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் மாணவர்கள் 10,11, 12 ஆகிய வகுப்புகளுக்கு கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதேபோல் மாணவர்களுக்கு பயிற்சி திறனை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக கட்டமைப்புகளை பள்ளியில் உருவாக்க வேண்டும். கூடுதல் நேரம் வகுப்புகள் நடத்த வேண்டும். என பெற்றோர்கள் வலியுறுத்தினர். பின்பு மாநில கல்விக்கொள்கை தலைவர் முருகேசன் பேசுகையில், மாநில கல்விக் கொள்கை கருத்து கேட்புகள் 90 சதவீதத்திற்கு மேல் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு மாதத்திற்குள் முற்றிலும் முடிவடைந்து அந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும். மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த நூலகம், கணினி அறை உருவாக்க வேண்டும் என கூறினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் சக்தி, கமுதக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மோகன், பரமக்குடி வட்டார கல்வி அலுவலர் ரவிக்குமார், பள்ளிகள் துணை ஆய்வாளர் தெட்சிணாமூர்த்தி உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.