மாநில கால்பந்து போட்டி; சென்னை அணி வெற்றி


மாநில கால்பந்து போட்டி; சென்னை அணி வெற்றி
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத்தில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத்தில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.

கால்பந்து போட்டி

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி கால்பந்து மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான மாநில கால்பந்து போட்டி கடந்த 4-ந் தேதி தொடங்கியது. நிறைவு நாளான நேற்று காலை நடைபெற்ற 3-வது, 4-வது இடத்திற்கான போட்டியில் ஊட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளி அணியும், ஆறுமுகனேரி பியர்ல்ஸ் பப்ளிக் பள்ளி அணியும் மோதின. இதில் ஊட்டி அணி வெற்றி பெற்று 3-வது இடத்தையும், ஆறுமுகநேரி அணி 4-வது இடத்தையும் பெற்றது.

பின்னர் மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி அணியும், திருச்சி காஜாமியான் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில் 2:1 என்ற கோல் கணக்கில் சென்னை டான்போஸ்கோ மேல்நிலை பள்ளி அணி வெற்றி பெற்றது.

அமைச்சர் பரிசு வழங்கினார்

பரிசளிப்பு விழாவிற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி முதலிடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ.20,000 ரொக்கப்பரிசும், மர்காஷிஸ் கோப்பையையும் வழங்கினார். 2-வது இடத்தை பிடித்த திருச்சி காஜா மியான் மேல்நிலைப்பள்ளி அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசும், மர்காஷிஸ் டிராபியும் வழங்கப்பட்டது.

3-வது இடம் பிடித்த ஊட்டி அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும், எஸ்.ஏ.தாமஸ் கோப்பையும் வழங்கப்பட்டது. 4-வது இடத்தைப்பிடித்த ஆறுமுகநேரி அணிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசும், எஸ்.ஏ.தாமஸ் கோப்பையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நாசரேத் நகரப்பஞ்சாயத்து தலைவர் நிர்மலா ரவி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்கத் தலைவர் ரூபன் துரைசிங், செயலாளர் ஜட்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுதாகர் தலைமையில் தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ், ஆசிரியர்கள் உடற்பயிற்சி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்பயிற்சி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வசுந்தர், ஜெயசன் சாமுவேல் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story