மக்களுக்காக சேவை செய்பவர்களை தான் கவர்னராக நியமிக்க வேண்டும் - சீமான்
முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
சென்னை,
முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது ;
முதல் அமைச்சர் ஸ்டாலின் கேரளாவில் சென்று மாநில சுயாட்சி பேசுகிறார். ஆனால், இங்கு இரட்டை ஆட்சி நடக்கிறது என சொல்கிறார்கள். இத்தனை காவல்துறை அதிகாரிகள் இருக்கும்போது, எதற்கு கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு வழங்கினார்கள். அனைத்து உரிமைகளை மாநில அரசு இழந்து வருகின்றது.
ஐபிஎஸ், ஐஏஎஸ், நீதிபதிகள் இவர்களை கவர்னராக நியமிப்பதை நிறுத்த வேண்டும் எனக் கூறினார். இது போன்ற அதிகாரிகளை ஓய்வு பெற்ற பிறகு கவர்னராக நியமிக்கிறீர்கள் அவ்வாறு இருக்கக் கூடாது. இனிமேல் மக்களுக்காக சேவை செய்து வந்த தலைவர்களை கவர்னராக நியமிக்க வேண்டும் அரசியல் தலைவர்களை மட்டுமே ஆளுநராக நியமிக்க வேண்டும் என தெரிவித்தார்.