மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல்


மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல்
x

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், தர்மர், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம் ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.

தி.மு.க. தரப்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய தலைவர் தர்மர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

வேட்பு மனு தாக்கல்

அவர்கள் இருவரும் நேற்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அப்போது முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ப.சிதம்பரம்

இதேபோன்று காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரமும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, கார்த்தி சிதம்பரம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முன்னதாக ப.சிதம்பரம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

வேட்பு மனு தாக்கல் முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், 'பிரதமர் நரேந்திரமோடி சென்னை வந்த போது தமிழக அரசு சார்பில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் பங்கேற்ற விழாவில் தி.மு.க. அரசின் சாதனைகளை, மாநிலத்தின் தேவையை முதல்-அமைச்சர் எடுத்துக்கூறி இருக்கிறார். இதில், எந்த தவறும் இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒன்றியம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஒன்றிய அரசு என குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் செய்கிறார்கள் என்பது அபத்தமான குற்றச்சாட்டு' என்றார்.

வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

வேட்பு மனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியுடன் முடிவடைகிறது. நாளை (புதன்கிழமை) வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. வருகிற 3-ந்தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

போட்டியிருக்கும் பட்சத்தில் வருகிற 10-ந்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகி உள்ளதால் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.


Next Story