மாநில அளவிலான காதி இந்தியா கண்காட்சி தொடக்கம்


மாநில அளவிலான காதி இந்தியா கண்காட்சி தொடக்கம்
x

மாநில அளவிலான காதி இந்தியா கண்காட்சி தொடங்கியது

திருச்சி

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 40 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் புதிதாக தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பல்வேறு தொழில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களின் மாநில அளவிலான கண்காட்சி மற்றும் விற்பனை 'காதி இந்தியா' என்ற தலைப்பில் திருச்சி, தில்லைநகரில் உள்ள மக்கள்மன்றத்தில் வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். கண்காட்சியில் கிராமப்புற கைவினை கலைஞர்கள் தயாரித்த கதர் வேட்டிகள், பட்டு சேலைகள், சணல் பொருட்கள், பல்வேறு ஆயத்த ஆடைகள், ஆயுர்வேத மருந்து பொருட்கள், மூலிகைகள், தேன் உள்பட பல்வேறு பொருட்கள் 50 அரங்குகளில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து கதர் ரகங்களுக்கும் 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கண்காட்சியின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. தொடக்க விழாவில் திருச்சி பாரத மிகுமின் கழக பொது மேலாளர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார். மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் செந்தில்குமார், கதர் கிராம தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் சுரேஷ், தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில்கள் வாரிய துணை இயக்குனர் பாலகுமாரன், திருச்சி வடக்கு சர்வோதய சங்க செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Next Story