இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் 750 விசைப்படகுகளில் அதிநவீன கருவி - மீனவர்களுக்கு புயல், மழை காலத்தில் உதவும்


இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் 750 விசைப்படகுகளில் அதிநவீன கருவி - மீனவர்களுக்கு புயல், மழை காலத்தில் உதவும்
x

மீனவர்களுக்கு புயல், கனமழை காலத்தில் உதவக்கூடிய இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் கூடிய அதிநவீன தொலை தொடர்பு கருவி, காசிமேட்டில் 750 படகுகளில் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னை

ஆழ்கடலில் விசைப்படகில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும் போது அவர்களுக்கு இயற்கை சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் குறித்து தகவல் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் அதிக கனமழை மற்றும் புயலின்போது மீனவர்கள் செல்லும் விசைப்படகுகள் கடல் அலையின் வேகத்துக்கு ஏற்ப திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது.

இதனை தடுக்கும் வகையில் இஸ்ரோவின் தொழில் நுட்பத்துடன் கூடிய அதிநவீன தொலைத்தொடர்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தற்போது இதனை சென்னை காசிமேடு மீனவர்களின் 750 விசைப்படகுகளில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் கடலில் எந்த பகுதியில் உள்ளனர் என்பதை கண்டறியவும், இயற்கை சீற்றம் குறித்து முன்கூட்டியே மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்கவும் முடியும். இந்த கருவி ஜிசாட்-6 செயற்கைகோள் வழியாக இயங்கும்.

இந்த தொழில்நுட்ப கருவியில் எஸ்.ஓ.எஸ். என்ற அவசரகால பொத்தான் பொருத்தப்பட்டுள்ளது. கடலில் அவசர காலத்தில் எஸ்.ஓ.எஸ். பொத்தானை அழுத்தினால் அதிலிருந்து செல்லக்கூடிய தகவல் மற்றும் படகு இருக்கக்கூடிய இடம் குறித்து தகவலாக மீன்வளத்துறை, படகின் உரிமையாளர் மற்றும் கடலோர காவல் படையினருக்கும் சென்றடையும்.

இதேபோல் கடலில் ஆபத்தில் படகு இருக்கும் நேரத்தில் அது குறித்து மற்றொரு படகில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதன் மூலம் கண்டறிய கூடிய தொழில்நுட்ப கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆழ் கடலில் சிக்கி தவிக்கும் படகுகளை சுலபமாக கண்டறிந்து மீட்க முடியும் என்று மீன் வளத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை பற்றிய தகவல் அனுப்ப வேண்டும் என்றால் அதை இந்த சாதனம் மூலம் எளிதாக அனுப்பலாம். அவசர காலங்களில் இந்த கருவியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் 28 மணி நேரம் இயங்கக்கூடிய கருவி ஆகும்.

கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி முதல் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம் கடலூர், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட மீன் பிடி துறைமுகங்களில் உள்ள சுமார் ஆயிரம் விசைப்படகுகளில் இயற்கை பேரழிவின்போது ஆபத்துகளை தடுக்கும் வகையில் செயற்கைக்கோள் மூலம் இயங்கக்கூடிய இந்த தொலை தொடர்பு கருவியை நிறுவும் திட்டம் செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக இந்திய அரசு ரூ.18 கோடி நிதி உதவி வழங்கி உள்ளது. ஜி சாட்-6 செயற்கைகோள் மூலம் தகவல் தொடர்பு சாதனங்களை பெற்ற முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story