கருணாநிதி பெயரில் அதிநவீன ஆஸ்பத்திரி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்


கருணாநிதி பெயரில் அதிநவீன ஆஸ்பத்திரி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
x

ரூ.376 கோடி செலவில் 1000 படுக்கை வசதிகளுடன் சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கருணாநிதி நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியை டாக்டர்கள், நர்சுகளை கொண்டு ரிப்பன் வெட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், ரூ.376 கோடி செலவில் 1,000 படுக்கை வசதிகளுடன் 6 மாடிகளாக கட்டப்பட்டுள்ள கருணாநிதி நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை தாங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியை பெண் டாக்டர்கள், நர்சுகளை கொண்டு ரிப்பன் வெட்டச் செய்து திறந்து வைத்தார். அதற்கான கல்வெட்டையும், பின்னர், ஆஸ்பத்திரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் வெண்கல சிலையையும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆஸ்பத்திரியை பார்வையிட்டார்

அதன்பின்னர், ஆஸ்பத்திரியை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா மேடைக்கு வந்தார். விழா தொடங்கியதும், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அனைவரையும் வரவேற்றார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொது பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி பேசினார். நிறைவாக, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேட்டி நன்றி கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், சாத்தூர் ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன், மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன் உள்ளிட்ட அமைச்சர்கள், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், எஸ்.ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வீராசாமி உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கவிஞர் வைரமுத்து, சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

12 அதிநவீன சிகிச்சை பிரிவுகள்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டு 15 மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த ஆஸ்பத்திரி 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் இதயம், சிறுநீரகம், மூளை, நரம்பியல், புற்றுநோய் உள்பட 12 அதிநவீன சிகிச்சை பிரிவுகள் உள்ளது. இந்த சிகிச்சை பிரிவுகளுக்கு அதிநவீன கருவிகள் ரூ.146 கோடியில் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனைக்கு 757 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Related Tags :
Next Story