சென்னை ஐ.ஐ.டி.யில் அதிநவீன 'சிலிகான் போட்டானிக்ஸ்' ஆராய்ச்சி மையம்
சென்னை ஐ.ஐ.டி.யில் அதிநவீன ‘சிலிகான் போட்டானிக்ஸ்' ஆராய்ச்சி மையம் மத்திய அரசின் நிதியுதவியுடன் தொடக்கம்.
சென்னை,
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (எம்.இ.ஐ.டி.ஒய்.) நிதியுதவியுடன் சென்னை ஐ.ஐ.டி.யில் அதிநவீன சிலிகான் போட்டானிக்ஸ் ஆராய்ச்சி மையம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. குவாண்டம் கம்ப்யூட்டேசன், நியூரல் நெட்வொர்க்குகள், செயற்கை நுண்ணறிவு, 5ஜி மற்றும் 6 ஜி தொழில்நுட்பம் போன்ற மேம்பட்ட தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு இந்த ஆராய்ச்சி மையம் இன்றியமையாதது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த அதிநவீன ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் குழு ஒருங்கிணைப்பாளர் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) சுனிதா வர்மா, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி, சென்னை ஐ.ஐ.டி. சிலிகான் போட்டானிக்ஸ் ஆராய்ச்சி மையத்தின் தலைமை ஆய்வாளர் பிஜாய் கிருஷ்ணதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பேசுகையில், 'சென்னை ஐ.ஐ.டி.யில் மத்திய அரசின் முயற்சியில் மற்றொரு திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூலம் சென்னை ஐ.ஐ.டி.யில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், இந்த திட்டமும் வெற்றி பெறும்' என்றார்.