தாம்பரம் மெப்ஸ் சிக்னலில் ரூ.16 லட்சத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமரா


தாம்பரம் மெப்ஸ் சிக்னலில் ரூ.16 லட்சத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமரா
x

தாம்பரம் மெப்ஸ் சிக்னலில் ரூ.16 லட்சத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

சென்னை

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் ஜி.எஸ்.டி சாலையில் மெப்ஸ் சிக்னலில் எல்.இ.டி. விளக்குகள் எரியும் விதமாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் கம்பத்தை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் இயக்கி வைத்தார். அதேபோல் அங்கு தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் தொழில் கூட்டமைப்பு சார்பில் ரூ.16 லட்சம் செலவில் வாகனங்களின் எண்களை கண்டறிந்து பதிவு செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், அதன் காட்சிகளை பதிவு செய்யும் சூப்பர் கணினி ஆகியவற்றையும் அவர் இயக்கி வைத்தார்.

மேலும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுக்கு விதிமுறையை மீறும் வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாக அபராதம் வசூலிக்கும் 'ஸ்வைப்பிங் கருவி'களையும் வழங்கி நடைமுறைப்படுத்தினார்,

பின்னர் நிருபர்களிடம் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறும்போது, "போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்களை பணமாக பெறாமல் ஆன்லைன் மூலம் செலுத்தும் வகையில் சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் 'ஸ்வைப்பிங் கருவி' வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பணம் பெற வேண்டும், போலீசார் பணமாக வாங்கக்கூடாது. மாநகர பகுதியில் பழுதடைந்து செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சீர்செய்து விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


Next Story