மாநில யோகா போட்டி
வாசுதேவநல்லூர் தரணி மெட்ரிக் பள்ளியில் மாநில யோகா போட்டி நடந்தது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான 23-வது யோகா போட்டி நடைபெற்றது. சிவகிரி பிராண யோகா அகாடமி ஒருங்கிணைப்பாளர் எஸ்.அருண் குமார் போட்டிைய நடத்தினார். போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ஓம்கார ஆசனம், விருச்சிக ஆசனம், காலபைரவாசனம், விபரீத தண்டாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்கள் செய்து காண்போரை அசத்தினர். போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. அதில் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பொதுப்பிரிவில் 43 தங்கம், 23 வெள்ளி, 8 வெண்கலம், சாம்பியன்ஷிப் பிரிவில் 3 மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றார்கள்.
தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில் நாமக்கல் மாவட்டம் முதல் பரிசையும், விருதுநகர் மாவட்டம் இரண்டாம் பரிசையும் பெற்றது. சாம்பியன்ஷிப் பட்டத்தை தரணி சர்வதேச பள்ளியும், அரியநாயகிபுரம் ஸ்ரீலட்சுமி மெட்ரிக்குலேசன் பள்ளியும் பெற்றது. மேலும் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் பட்டத்தை தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெற்று வெற்றி வாகை சூடியது. போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரையும் தரணி குழுமத்தின் தலைவர் பழனி பெரியசாமி, பள்ளிகள் நிர்வாக குழு தலைவர் சம்பத் ஆகியோர் பாராட்டினர். நிகழ்ச்சியில் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ராமலிங்கம் மற்றும் பள்ளியின் முதல்வர் குழந்தைசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.