நவபாஷாண மூலவர் சிலையை ஸ்தபதிகள் ஆய்வு


நவபாஷாண மூலவர் சிலையை ஸ்தபதிகள் ஆய்வு
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் உள்ள நவபாஷாண மூலவர் சிலையை தலைமை ஸ்தபதி மற்றும் சிலை பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல்

சிலை பாதுகாப்பு குழு

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பழனியில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேக பணியின்போது பழனி மலைக்கோவிலில் உள்ள நவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலையை பாதுகாத்து பலப்படுத்தவும், ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன், தலைமை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி மற்றும் ஆன்மிக சான்றோர்கள், ஆகம வல்லுனர்கள், மக்கள் பிரதிநிதிகள் என 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் கடந்த மாதம் கோவில் அர்த்த மண்டபத்துக்குள் சென்று சிலையை பார்வையிட்டனர்.

நவபாஷாண சிலை

இந்தநிலையில் சிலை பாதுகாப்புக்குழுவை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன், தலைமை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி மற்றும் ஸ்தபதிகள், கோவில் குருக்கள்கள் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். அப்போது அவர்கள், மலைக்கோவிலில் உள்ள நவபாஷாண மூலவர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் கருவறை பகுதியில் இருந்து சீரமைப்பு பணிக்காக அகற்றப்பட்ட தங்க படிக்கட்டுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மதியம் கோவில் அலுவலகத்தில் சிலை பாதுகாப்புக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் மூலவர் சிலை பாதுகாப்பு குழுவினர், கோவில் அறங்காவலர் குழுவினர், கோவில் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆகமவிதிப்படி ஆய்வு

பின்னர் இந்த ஆய்வு குறித்து சிலை பாதுகாப்பு குழுவை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் கூறுகையில், அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி மற்றும் ஸ்தபதி குழுவினர் சிலையை காண வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து அரசின் வழிகாட்டுதல் மற்றும் ஆகம விதிப்படி நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்படும். மேலும் ஆய்வுக்கு முன்னதாக அர்ச்சகர்கள், குருக்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி ஆகம விதிப்படி சிறப்பு பூஜை செய்யப்பட்டது என்றார்.

பழனி முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் கூறுகையில், சிலை செய்வதும், பாலாலய பூஜை செய்வதும் ஸ்தபதிகள் தான். அதன்படி ஸ்தபதி குழுவினர் ஆகமவிதியை பின்பற்றியே மூலவர் சிலையை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குறித்து தவறான தகவல், வதந்திகளை பரப்புபவர்கள் சுயவிளம்பரத்துக்காக செய்கிறார்கள். எனவே ஆய்வு குறித்து பரப்பப்படும் தவறான கருத்துகளை நம்ப வேண்டாம். அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திதான் ஆய்வு செய்கிறோம் என்றார்.


Next Story