50 ஆண்டுகளுக்குப்பிறகு சொந்த கோவிலுக்கு வந்த 3 ஐம்பொன்சிலைகள்


50 ஆண்டுகளுக்குப்பிறகு சொந்த கோவிலுக்கு வந்த 3 ஐம்பொன்சிலைகள்
x

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 3 ஐம்பொன் சிலைகள் 50 ஆண்டுகளுக்குப்பிறகு சொந்த கோவிலுக்கு வந்தது. அந்த சிலைகளுக்கு மேளதாளம் முழங்க, மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 3 ஐம்பொன் சிலைகள் 50 ஆண்டுகளுக்குப்பிறகு சொந்த கோவிலுக்கு வந்தது. அந்த சிலைகளுக்கு மேளதாளம் முழங்க, மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிலை கடத்தல்

தஞ்சை, நாகை, அரியலூர், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பழமையான கோவில்களில் இருந்த ஐம்பொன் சிலைகள், கற்சிலைகள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது. இதில் 10 சிலைகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பதை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

அந்த சிலைகள் மீட்கப்பட்டு சிலை கடத்தல் வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிலைகளை அந்தந்த கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

கோவிலில் ஒப்படைப்பு

அதன்படி நேற்று முதல் கட்டமாக தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் அருகே உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு 3 ஐம்பொன் சிலைகள் கொண்டு வரப்பட்டன. அவற்றை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த்முரளி தலைமையில், ஐ.ஜி.தினகரன், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மலைச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் எடுத்து வந்தனர்.

தொடர்ந்து சிலைகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சிலைகளை போலீசார் கோவிலில் ஒப்படைத்தனர்.

50 ஆண்டுகளுக்கு பிறகு...

இதில் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை கடந்த 1966-1977-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கடத்தப்பட்டதாகும்.

இந்த சிலை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஏசியா சொசைட்டி அருங்காட்சியகத்தில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்து, மீட்டு, நேற்று கோவிலில் ஒப்படைத்தனர்.

50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவிலுக்கு வந்த நடராஜர் சிலைக்கு கோவில் நிர்வாகம் சார்பில், மாலைகள் அணிவித்தும், கற்பூர ஆரத்தி எடுத்தும், மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் நடராஜர் சிலைக்கு பக்தர்கள், மலர்கள் தூவியும் வரவேற்றனர்.

மேலும் 2 கோவில்கள்

நேற்று மாலை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாப்பேட்டை அருகே தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோவிலில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட சிவன்-பார்வதி ஐம்பொன் சிலை, அமெரிக்காவில் உள்ள டேவிட் ஹஸ்லி மியூசியத்தில் இருந்து மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதே போல் நாகை சாயாவனேஸ்வரர் கோவிலில் இருந்து 1965-ம் ஆண்டு மாயமான குழந்தை சம்பந்தர் ஐம்பொன் சிலை, ஆஸ்திரேலியாவில் உள்ள நேஷனல் கேலரியில் இருந்து மீட்டு, அந்த சிலையும் கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story