நகை வாங்குவது போல நடித்து 16 பவுன் நகைகள் திருட்டு
கும்பகோணத்தில், நகை வாங்குவது போல நடித்து 16 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில், நகை வாங்குவது போல நடித்து 16 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகைக்கடை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் பாபு என்பவர் நகைக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் மதியம் இருசக்கர வாகனத்தில் 35 வயது மதிக்கத்தக்க 2 பேர் நகை வாங்குவதற்காக வந்தனர். அவர்கள், நகைகளின் விலை நிலவரம் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்து நகைகளை எடுத்து பார்த்தனர்.
பின்னர் நகைகளை வாங்காமல் கடையில் இருந்து வெளியேறி சென்றனர். அவர்கள் இருவரும் கடையில் இருந்து வெளியே சென்ற பின்னர் பாபு மற்றும் ஊழியர்கள் நகைகளை அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
16 பவுன் நகைகள் திருட்டு
அப்போது பணம் வைக்கும் பெட்டியின் அருகே இருந்த தங்க மோதிரம் உள்ளிட்ட 16 பவுன் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாயமான நகைகளின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும். தொடர்ந்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.
அதில் கடைக்கு வந்த மர்ம நபர்கள் இருவரும் நகை வாங்குவது போல் நடித்து கடையில் இருந்த நகைகளை திருடிச்சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பாபு புகார் செய்தார்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் கும்பகோணம் பெரிய கடைத் தெரு நகைக்கடையில் அரங்கேறிய இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.