அடுத்தடுத்து 2 கடைகளில் பணம், மிக்சி திருட்டு
கடலூரில் அடுத்தடுத்து 2 கடைகளில் நடந்த திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 36). இவர் கடலூர் கோண்டூர் பஸ் நிறுத்தம் அருகில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.17 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் யாரோ பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர், போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நள்ளிரவு நேரத்தில் அய்யப்பன் கடையில் பணத்தை திருடிய மர்மநபர்கள், அருகில் இருந்த மனோகரன் என்பவருக்கு சொந்தமான ஓட்டல் பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 4 மிக்சிகளை திருடியதும் தெரியவந்தது.மேலும் அங்குள்ள ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைக்க முயன்ற போது, அவர்களால் உடைக்க முடியாததால் திருட்டு முயற்சியை கைவிட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.