கோவிலை உண்டியலை திருடி கிணற்றில் வீச்சு: மறியலில் ஈடுபட்ட 21 பேர் மீது வழக்கு
குளித்தலை அருகே கோவிலை உண்டியலை திருடி கிணற்றில் வீசப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சாலைமறியல்
கரூர் மாவட்டம், தோகைமலை சங்காயிபட்டி அருகே உள்ள ராம்நகர் பகுதியில் கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று முன்தினம் காலை குப்பாச்சிப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (வயது 23) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடினர். இதையடுத்து தோகைமலை போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் திருடப்பட்ட கோவில் உண்டியலை குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிபட்டி பகுதியில் இருந்த பாழடைந்த கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கிணற்றில் வீசப்பட்ட கோவில் உண்டியலை மீட்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு குப்பாச்சிப்பட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
21 பேர் மீது வழக்கு
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டத்தையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 21 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் கிணற்றில் வீசப்பட்ட கோவில் உண்டியலை மீட்பது குறித்து நேற்று முன்தினமே முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று குப்பாச்சிபட்டி பகுதிக்கு சென்ற முசிறி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியோடு பாழந்தடைந்த கிணற்றில் இருந்து தண்ணீரை இறைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தண்ணீர் ஓரளவு குறைந்த பின்னர் கிணற்றுக்குள் மூழ்கி கோவில் உண்டியலை மீட்டு தோகைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.