வேப்பூர் அருகே சிவன், அய்யனார் கோவிலில் 20 கலசங்கள் திருட்டு நள்ளிரவில் கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


வேப்பூர் அருகே    சிவன், அய்யனார் கோவிலில்  20 கலசங்கள் திருட்டு    நள்ளிரவில் கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

வேப்பூர் அருகே சிவன், அய்யனார் கோவில் கோபுரங்களில் இருந்த 20 கலசங்களைநள்ளிரவில் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடலூர்

ராமநத்தம்,

சிவன் கோவில்

வேப்பூர் அருகே சிறுநெசலூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் யோகாம்பிகை சமேத ஆவுடையார் கோவில் உள்ளது. பழமைவாய்ந்த சிவன் கோவிலான இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும், கோவிலை பூட்டிவிட்டு பூசாரி வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர், நேற்று காலை பூஜை செய்வதற்காக வழக்கம்போல் கோவிலை திறக்க வந்தார்.

20 கலசங்கள் திருட்டு

அப்போது கோவில் கோபுரங்களில் இருந்த 18 கலசங்களை காணவில்லை. இதேபோல் அருகில் உள்ள அய்யனார் கோவில் கோபுரத்தில் இருந்த 2 கலசங்களையும் காணவில்லை. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி, இதுபற்றி வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கலசங்கள் திருடு போன கோவில்களை நேரில் பார்வையிட்டு, தடயங்களை சேகரித்ததோடு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

கிராம மக்கள் அச்சம்

விசாரணையில், நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த மர்மநபர்கள் 2 கோவில்களின் கதவு பூட்டுகளை உடைக்காமல் கோவில் சுவர் வழியாக கோபுரங்கள் மீது ஏறி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 கலசங்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 கோவில்களில் கலசங்களை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அய்யனார் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 30 கிலோ எடையிலான பித்தளை மணிகளை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. கோவிலை குறிவைத்து திருடுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Next Story