பெரியார் பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


பெரியார் பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

வேலூர் கோட்டை பெரியார் பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்பட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் வேலூர் மாநகராட்சி 32-வது வார்டு கொணவட்டம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொணவட்டம் விரிவு பகுதியான இந்திரா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சாலைகளை சீரமைக்கவும், கழிவுநீர் கால்வாய் அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் சீரான குடிநீர் வசதி, போதுமான மின்விளக்கு வசதி, குப்பை தொட்டி போன்ற வசதிகள் இல்லை. இதுபற்றி பலமுறை மனு அளித்தும் நேரில் முறையிட்டும் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செயல்படுத்தப்படாமல் உள்ளது. எங்கள் பகுதியில் விரைந்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெரியார் பூங்கா

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் சிம்புதேவன், ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் வேலூர் கோட்டை அருகே செயல்பட்டு வந்த பெரியார் பூங்கா பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாகவும், குழந்தைகள் விளையாடும் பூங்காவாகவும் இருந்தது. வேலூர் நகரை சேர்ந்த ஏராளமான மக்கள் இங்கு வந்து பொழுதுபோக்கினர். இந்தநிலையில் பூங்கா மூடப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். எனவே மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் பூங்காவை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுத்து அதனை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அணைக்கட்டு தாலுகா செம்பேடு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகின்றனர். எனது கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.


Next Story