மயான ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


மயான ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x

டி.ஜி.புதூர் கிராமத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ஈரோடு

டி.ஜி.புதூர் கிராமத்தில் மயான ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மயானம் ஆக்கிரமிப்பு

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பெருந்துறை அருகே உள்ள எல்லீஸ்பேட்டை அண்ணா காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'எங்கள் பகுதியில் 200 பேர் வசித்து வருகிறோம். இங்கு ரோடு வசதி இல்லாததால் பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட ஊருக்குள் வந்து செல்ல சிரமப்படுகிறது. எனவே எல்லீஸ்பேட்டை அண்ணா காலனியில் ரோடுபோட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

கோபி பெரியகொடிவேரி டி.ஜி.புதூரை சேர்ந்த கிராம மக்கள் கொடுத்திருந்த மனுவில், 'எங்கள் பகுதியில் உள்ள மயானத்தை சிலர் ஆக்கிரமித்து கொண்டு மயானத்துக்கு செல்ல அனுமதிப்பதில்லை. இதுகுறித்து ஊராட்சி உள்பட பல்வேறு நிலை அதிகாரிகளுக்கு மனு வழங்கியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மயான ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

சுகாதார சீர்கேடு

ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில், 'சிவகிரி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல், சிவகிரி சந்தை பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது. குப்பை கழிவுகளில் இருந்து பரவும் கிருமிகளால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சிவகிரி பேரூராட்சி நிர்வாகம், சந்தை பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

சமூக நீதி மக்கள் கட்சி நிறுவன தலைவர் வடிவேல் ராமன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில், 'சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு தினம் வருகிற 17-ந்தேதி அரசு விழாவாக நடைபெற உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக அரசு மரியாதையுடன் மொடக்குறிச்சி சமுதாய கூடத்தில் நிகழ்ச்சி நடந்தது.

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் புலவர் ராசு எழுதிய நூலில் நல்லமங்காபாளையத்தை சேர்ந்தவர் பொல்லான் என குறிப்பிட்டுள்ளார். எனவே அங்குதான் நிகழ்ச்சி நடைபெற வேண்டும். மொடக்குறிச்சி சமுதாய கூடத்தில் நிகழ்வை நடத்துவது வரலாற்றை மறைக்கும் செயல். எனவே பொல்லான் நினைவு தினத்தை நல்லமங்காபாளையத்தில் தான் நடத்த வேண்டும்' என்று தெரிவித்து இருந்தனர்.

324 மனுக்கள்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் குருநாதன் கொடுத்திருந்த மனுவில், 'பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

கூட்டத்தில் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட உதவி தொகைகள் கேட்டும், வீட்டுமனைப் பட்டா, கல்விக் கடன், அடிப்படை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மொத்தம் 324 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க ெசன்ற ேபாது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story