கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
மயிலாடுதுறை பாதாள சாக்கடை கழிவு நீர் சேகரிப்பு மையத்தில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை பாதாள சாக்கடை கழிவு நீர் சேகரிப்பு மையத்தில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதாள சாக்கடை திட்டம்
மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை கழிவு நீர் செல்லும் குழாய்கள் உடைந்து உள்ளது. இதன் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் மிகப்பெரிய பள்ளங்கள் உருவாகி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின்படி கழிவுநீர் அனைத்தும் மன்னம்பந்தல் ஊராட்சியில் ஏ.வி.சி., கல்லூரியின் பின்புறம் உள்ள பகுதியில் சேகரிக்கப்படுகிறது.
கழிவு நீர் சுத்திகரிக்கப்படவில்லை
சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கழிவுநீர் சேகரிப்பு மையத்தில் பிரமாண்ட தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் கழிவுநீர் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மீதமுள்ள இடத்தில் புல் வகைகள் வளர்க்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
ஆனால் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரையில் நிறைவேற்றப்படவில்லை. கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் சேகரிக்கப்படும் கழிவுகள் அனைத்தும் அருகில் உள்ள சத்தியவாணன் பாசன வாய்க்காலில் திறந்து விடப்படுகிறது.
பாசன வாய்க்காலில் கழிவு நீர்
இதனால் சத்தியவாணன் பாசன வாய்க்காலில் எந்நேரமும் கழிவுநீர் செல்கிறது. இதனை கண்டித்து அருகில் உள்ள விளநகர், ஆறுபாதி கிராம மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த தேர்தலின் போதுகூட தேர்தல் புறக்கணிப்பு செய்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டப்படும் என்று அறிவித்தனர்.
அப்போது அந்த மக்களிடம் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் தற்போதுவரை கழிவுநீர் பாசன வாய்க்காலில் கலப்பது தடுக்கப்படவில்லை.
சுகாதார கேடு
இதுகுறித்து விளநகர் கிராமத்தை சேர்ந்த சுபாஷ்ராஜா என்பவர் கூறுகையில், மயிலாடுதுறை நகரில் இருந்து பாதாள சாக்கடை மூலம் கொண்டு வரப்படும் கழிவுநீர் முழுவதும் சத்தியவாணன் வாய்க்காலில் திறந்து விடப்படுகிறது. இதனால் வாய்க்காலில் பல கிலோமீட்டர் தூரம்வரை கழிவு நீர் தேங்கி எந்நேரமும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் நிலத்தடி நீரில் கழிவு நீர் கலந்து விட்டதால் கைப்பம்புகள் மூலம் வரும் குடிநீரில் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மன்னம்பந்தல், விளநகர், ஆறுபாதி ஆகிய கிராமங்களில் உள்ள குளங்களுக்கு சத்தியவாணம் வாய்க்கால்தான் நீராதாரமாக உள்ளது. இந்த வாய்க்காலில் கழிவுநீர் கலக்கப்படுவதால் தற்போது குளங்களில் நீர் நிரப்பப்படாமல் எப்போதும் வறண்ட நிலையிலேயே குளங்கள் காட்சியளிக்கின்றன.
எனவே பாதாள சாக்கடை திட்டத்தில் குறிப்பிட்டபடி கழிவுநீர் சேகரிப்பு மையத்தில் சுத்திகரிப்பு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.