போக்குவரத்து கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர் தகவல்
அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்படுவதுடன், புதிதாக 4 ஆயிரம் பஸ்கள் வர உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
கோவை,
கோவை சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அலுவலகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள், பணிக்காலங்களில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:-
காலிப்பணியிடங்கள்
நமது மாநிலத்தில்தான் குக்கிராமங்களுக்கு கூட பஸ்வசதி உள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 100 மின்சார பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் சென்னையில் நடைபெறுகிறது. மேலும் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வர உள்ளன. அரசு பஸ்சின் மஞ்சள் நிறமும், பள்ளி வாகனங்களுக்கான மஞ்சள் நிறமும் வேறு, வேறாக இருக்கும். மகளிர் கட்டணமில்லா பஸ்சில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 68 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்த டிரைவரால் பரபரப்பு
விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டர். அப்போது, கோவையில் பணிபுரியும் அரசு பஸ் டிரைவர் கண்ணன் என்பவர் தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த அதிகாரிகள் குழந்தையை கையில் எடுத்தனர். அதன் பின்னர் அமைச்சரிடம் தனக்கு பணியிட மாறுதல் கேட்டு கண்ணன் கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து டிரைவர் கண்ணன் கூறுகையில், எனது சொந்த ஊர் தேனி. எனக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது மனைவி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார். எனவே எனது இரண்டு பெண் குழந்தைகளையும் எனது தாய், தந்தையர் தான் பார்த்துக்கொள்கின்றனர். எனது பெற்றோர்களுக்கும் வயது காரணமாக குழந்தைகளை பார்த்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதால் எனக்கு சொந்த ஊரான தேனிக்கு பணி மாறுதல் வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். இதுகுறித்து பலமுறை பொது மேலாளரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் கடைசியாக அமைச்சரை நேரில் பார்த்து குழந்தையுடன் கோரிக்கை வைத்துள்ளேன். எனக்கு இது தவிர வேறு வழி தெரியவில்லை. எனது பிரச்சினை குறித்து பேசி தீர்வு காணப்படும் என அமைச்சர் கூறியது ஆறுதல் அளிக்கிறது.