திருத்தணி முருகன் கோவிலை மேம்படுத்த நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு தகவல்


திருத்தணி முருகன் கோவிலை மேம்படுத்த நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு தகவல்
x

திருத்தணி முருகன் கோவிலை மேம்படுத்த நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு தகவல்இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை மண்டலத்திற்குட்பட்ட கோவில்களின் செயல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவள்ளூர்

சென்னையை தொடர்ந்து 38 வருவாய் மாவட்டங்களில் இருக்கிற 20 மண்டலங்களிலும் இதேபோன்ற கலந்தாய்வு கூட்டங்களை தொடர்ந்து நடத்தவுள்ளோம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற கோவில்களின் குளங்கள் சீரமைப்பதற்கு 2021-2022-ம் ஆண்டில் சுமார் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்திருந்தோம்.

கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் இருந்த நிலை மாறி, தற்போது மாவட்ட அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலை மேம்படுத்துவதற்கு மாஸ்டர் பிளானில் எடுத்து இருக்கிறோம். ஓடாத தங்க தேரை ஓட வைத்திருக்கிறோம், வெள்ளி தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கோவில்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் இறந்த யானைக்கு மணிமண்டபமும், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளியும் அமைக்க இருக்கின்றோம். பக்தர்கள் தங்கும் விடுதியை புனரமைப்பதற்கும், புதிதாக விடுதிகள் கட்டுவதற்கும் துறை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மலையடிவாரத்தில் பெரிய அளவிலான திருமண மண்டபம் கட்ட இருக்கின்றோம். கோவிலுக்கு செல்ல மாற்றுப்பாதை ஒன்றை வடிவமைப்பதற்கு வனத்துறை அமைச்சருடன் பேசி இருக்கி்றோம்.

இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகை விழாவின்போது திருத்தணியில் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். இதற்கு முன்பு இல்லாத அளவில் அதிகமான வருமானமும் உண்டியல் காணிக்கை மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. இங்கு நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் பணம் பெறும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், சி.ஹரிப்ரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story