கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முன்னேற்பாடுகள்


கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முன்னேற்பாடுகள்
x

சோளிங்கரில் கோடைகாலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடப்பதாக நகராட்சி தலைவர் தமிழ்செல்வி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் நகராட்சி கூட்டம், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பழனி முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகள்குறித்து பேசினர்.

அவர்கள் பேசியதாவது:-

கழிவுநீர் சுத்திகரிப்பு

8-வது வார்டு உறுப்பினர் கோபால்:- வருகின்ற கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன் பொன்னை ஆற்றில் உள்ள நான்கு கிணறுகளை சீரமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். காலியாக உள்ள பொறியாளர், பணி மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 8-வது வாட்டில் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க ஆழ்துளை கிணற்றிக்கு மின் மோட்டார் அமைக்க வேண்டும் என்றார்.

5-வது வார்டு உறுப்பினர் ஆஞ்சிநேயன்:- சோளிங்கர் பஸ் நிலையத்தில் உள்ள ஆகிரமிப்பு கடைகளை அகற்றி, பஸ் பயணிகளுக்கு பயன்படும் விதமாக இருக்கைகள் மற்றும் ஓய்வு அறை அமைக்க வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், குளங்களை கணக்கெடுத்து தூர்வாரி மழைநீர் சேகரிப்பு செய்ய வேண்டும். 2009-ம் ஆண்டு கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் மண் புழு உரம் தயாரிப்பு முதலிடம் பிடித்தது. தற்போது அந்த திட்டம் செயல்படாமல் உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை சீரமைக்க வேண்டும். தேர் திருவிழாவை முன்னிட்டு காந்தி ரோட்டில் இருந்து மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்டு சாலை வரை தார் சாலை அமைக்க வேண்டும்.

10-வது வார்டு உறுப்பினர் சிவானந்தம்:- கோடைகாலத்தில் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாய் தூர்வார வேண்டும், கொசு மருந்து அடித்தல், மின் விளக்கு பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு பேசினர்.

முன்னேற்பாடுகள்

கூட்டத்தில் பேசிய நகராட்சி தலைவர் தமிழ்செல்வி நகராட்சியை மேம்படுத்தும் விதமாக பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு வருகிறது. நகர மன்ற உறுப்பினர்களின் முக்கியமான கோரிக்கைகள் விரைவில் செயல்படுத்தப்படும். பின்னர் ஒவ்வொரு கோரிக்கைகளும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படும். கோடை காலத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றார். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்கவோ, புகாப்படம் எடுக்கவோ நகராட்சி ஆணையர் பிரீத்தி அனுமதிக்காததை கண்டித்து அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., அ.ம.மு.க. கவுன்சிலர்கள் 7 பேர் வெளியிடப்பு செய்தனர்.


Next Story