பூபதியூரில் நடைபாதை வசதி ஏற்படுத்த நடவடிக்கை
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பூபதியூர் கிராமத்தில் நடைபாதை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
கோத்தகிரி,
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பூபதியூர் கிராமத்தில் நடைபாதை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
பழுதடைந்த நடைபாதை
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்ட ஓரசோலை பூபதியூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நடைபாதை பழுதடைந்ததால், அந்த வழியாக நடந்து செல்லவும், நோயாளிகள் மற்றும் இறந்தவர்களின் சடலங்களை சுமந்து கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டு வந்தது.
இதனால் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தை கிராம மக்கள் நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர். இதனால் பழுதடைந்த நடைபாதையை சீரமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் மக்கள் வழக்கமாக பயன்படுத்தி வந்த நடைபாதை உள்ள பட்டா நிலத்தின் உரிமையாளர் தனது நிலத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்கினார்.
நில அளவை
இதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் தாங்கள் பயன்படுத்தி வந்த நடைபாதையை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து பிரச்சினைக்குரிய நிலத்தில் தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளாரா? என்பதை அறிந்து, நில அளவை செய்து, கிராம மக்களுக்கு நடைபாதை வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்தநிலையில் கோத்தகிரி உதவி தாசில்தார் சதீஷ் நாயக் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் மோகன் குமார், சபீர்கான், நில அளவையர்கள் செந்தில் சங்கர் ஆகியோர் பூபதியூர் கிராமத்திற்கு சென்று கிராம மக்கள் முன்னிலையில் நில அளவை செய்தனர். அப்போது அங்கு ஏராளமானோர் திரண்டனர். நில அளவை மேற்கொண்ட பின், கிராம மக்களிடம் அதிகாரிகள் கையெழுத்து பெற்று சென்றனர்.