தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை
தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறினார்.
தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறினார்.
மாணவர் எழுச்சி தமிழ் மாநாடு
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் உலக தமிழ்க் காப்புக்கூட்டியக்கம் சார்பில் மாணவர் எழுச்சித்தமிழ் மாநாடு நேற்று நடந்தது. இதன் நிறைவு விழாவுக்கு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
ஆட்சி மொழி தமிழ்
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழி தமிழ் என்பதை உறுதி செய்யும் விதமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
பெரும்பாலான அலுவலகங்களில் 85 சதவீதம் ஆட்சி மொழித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் உள்ளதா? என ஆய்வு செய்யப்படுகிறது.
ரூ.2 ஆயிரம் அபராதம்
தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தொழிலாளர் துறைக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் கலந்து பேசியுள்ளதால், விரைவில் இரு துறைகளும் இணைந்து நடவடிக்கை விரைவுபடுத்தப்படும். தற்போது தமிழில் பெயர் பலகை வைக்கப்படாத கடைகள், நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை ரூ.50 என உள்ளதை ரூ.2 ஆயிரமாக உயர்த்துமாறு ஜகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதேபோல குடியிருப்பு அடுக்ககங்கள், வணிக வளாகங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அதற்கான நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களுக்கு பரிசு
பின்னர் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் உலக தமிழ்ப் பெயர்கள் பேரியக்கத்தையும் தொடங்கி வைத்து, பெயர் பலகையை திறந்து வைத்தார். மாநாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைப் போல அனைத்து நிலைப் பள்ளிகளிலும் தமிழைப் பகுதி ஒன்று பாடமாக வைப்பதற்கு அடுத்த கட்டமாக ஆணையிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டை முன்னதாக பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தொடங்கி வைத்தார். கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர அடிகளார், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு அருளுரை வழங்கினர்.
விழாவில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன், தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன், அனைத்திந்திய தமிழ்ச் சங்க பேரவை செயல் தலைவர் முகுந்தன், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, தமிழ்ப்பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் துரைசாமி வரவேற்றார். முடிவில் தமிழ் காப்புக் கூட்டியக்கத் தலைவர் அப்பாவு நன்றி கூறினார்.