புகழூர் காகித ஆலையை மேம்படுத்த நடவடிக்கை : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி


புகழூர் காகித ஆலையை மேம்படுத்த நடவடிக்கை : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
x

புகழூர் காகித ஆலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

கரூர்

அமைச்சர் ஆய்வு

கரூர் மாவட்டம், புகழூர் காகிதபுரத்தில் உள்ள டி.என்.பி.எல். காகித ஆலையை நேற்று காலை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு செய்தார். அப்போது ஆலையில் காகிதக்கூழ் தயாரிக்கும் இடம், காகிதம், காகித உற்பத்திக்கூடம், காகித கிடங்கு, பார்சல் அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து காகித ஆலை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று, ஆலையின் மேம்பாட்டு பணிகள் குறித்து பேசினார்.

பேட்டி

தொடர்ந்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி டி.என்.பி.எல். காகித ஆலையை ஆய்வு செய்ததில் உலகத்தரம் வாய்ந்த காகிதங்கள் உற்பத்தி செய்யப்படுவது தெரியவந்தது. எதிர்வரும் காலங்களில் ஆலையை இன்னும் மேம்படுத்தி விரிவாக்க பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் சட்ட விரோதமாக காகித ஆலையில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே தூய்மைக்காக இந்த ஆலைக்கு உலக தரத்திலான பல சான்றுகள் வழங்கப்பட்டிருப்பதால் ஆலை கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது என்ற குற்றச்சாட்டில் எனக்கு உடன்பாடில்லை.

சிறப்பான ஆலை

உலகத்தின் சிறப்பான ஆலைகளில் ஒன்றாக இந்த காகித ஆலை உள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தமிழ்நாட்டில் வேலை செய்கிறார்கள். எனவே காகித ஆலையில் பணியாற்றும் பெண்களின் அளவு வருங்காலங்களில் 50 சதவீத அளவு கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நீண்ட ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்களாக இருப்பவர்களை நிரந்தர பணியாளர்களாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் சம்பவம் நாட்டையே உலுக்கிய மோசமான சம்பவம். இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மரக்கன்றுகள்

முன்னதாக ஆலை வளாகத்தில் அமைச்சர் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

ஆய்வின்போது, ஆலையின் மேலாண்மை இயக்குனர் சாய்குமார், செயல் இயக்குனர் (இயக்கம்) கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர் (வனத்தோட்டம்) சீனிவாசன், பொதுமேலாளர் (மனித வளம்) கலையரசன், பாதுகாப்பு விழிப்புணர்வு அதிகாரி பண்டிகங்காதரன், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், ஆலை ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story