மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்


மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
x

ஊட்டியில் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் தெரிவித்தார்.

சட்டமன்ற மனுக்கள் குழு

தமிழக சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். குழுவின் தலைவரும், அரசின் தலைமை கொறடாவுமான கோவி.செழியன் மற்றும் உறுப்பினர்கள் மு.பெ.கிரி, ஆ.கோவிந்தசாமி, எம்.வி.பிரபாகர ராஜா, சா.மாங்குடி, செயலாளர் கி.சீனிவாசன், துணை செயலாளர் கோ.கணேஷ் ஆகியோர் ஊட்டி கிளப் ரோட்டில் மழைகாலத்தில் பாதிக்கப்படும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு குழுவினர் சென்று, அங்கு மனு கொடுத்த தோட்டக்கலைத்துறை ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது ஊழியர்கள் தோட்டக்கலை பூங்காக்கள், பண்ணைகளில் பணிபுரியும் பணியாளர்கள் டான்ஹாடா நிறுவனத்தின் கீழ் பணிபுரிகின்றனர். அந்நிறுவனத்தில் இருந்து விடுவித்து பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழு தலைவர் தெரிவித்தார்.

நேரடி விசாரணை

இதையடுத்து லவ்டேல் சந்திப்பு பகுதியில் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களை சட்டமன்ற மனுக்கள் குழுவினர் சந்தித்தனர். பின்னர் கேரட் கழுவும் நவீன எந்திரங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் குழுவினர் மனுதாரர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினர். அதன்பின்னர் சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊட்டியில் அதிக மழை பெய்தால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்து, மழைநீர் தேங்காமலும், ஆங்காங்கே குட்டைகள் அமைத்து தண்ணீரை தேக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் குழு தெரிவித்து உள்ளது. ஆய்வின்போது, மின் இணைப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக சிரமப்படுவதாக உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

உடனடி தீர்வு

கேரட் உற்பத்தியாளர்கள் தங்களுக்கு கேரட்டுகளை தரம் பிரிக்கும் எந்திரங்களை பொருத்த மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகள் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். கூட்டத்தில் 52 மனுதாரர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலுவையில் இருந்த 10 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, உடனடியாக தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கலெக்டர் அம்ரித், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, எம்.எல்.ஏ.க்கள் பொன்.ஜெயசீலன், கணேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story